Skip to main content

அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


                  2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர்.

அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் என்றும், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியும், இதற்காக 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

அதேநேரம், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்காக அயோத்தி நகரின் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக அயோத்தி மூல வழக்கின் மனுதாரான எம்.சித்திக் என்பவரின் வாரிசு மவுலானா சையது அஷத் ரஷீதி, அகில பாரத இந்து மகாசபா, உத்தரபிரதேச ஜாமியத் உலமா இ ஹிந்த் உள்ளிட்ட 18 மனுதாரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவர்களில் 9 பேர் இந்த வழக்குடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.

இதுதவிர பல்வேறு முஸ்லிம் மற்றும் இந்து அமைப்புக் களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்களும் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அனைத்து மனுக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த பரிசீலனை திறந்த கோர்ட்டில் இல்லாமல், தலைமை நீதிபதியின் அறையிலேயே நடைபெற்றது.

பரிசீலனைக்கு பின் அனைத்து மறுஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தி வழக்கில் தொடர்புடையவர்கள் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்கள் மற்றும் அவற்றுடன் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் மிகவும் கவனத் துடன் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அவற்றை விசாரணைக்கு ஏற்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினார்கள்.

இவை தவிர மேலும் 40 பேர் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இவர்களில் யாரும் முன்பு விசாரிக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மனுதாரர்கள் இல்லை என்பதால், அந்த மனுக்கள் மறுஆய்வுக்கு உகந்தவை அல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

Comments

Popular posts from this blog

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சாஸ்த்ரா பல்கலைக் கழக ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.