Skip to main content

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;

 மகன் மட்டுமல்ல; 
மருமகளும் இனி பொறுப்பு
புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம்.
நல்வாழ்வு சட்டம்:
பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறைவேற்றப்பட்ட மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தில், மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம், சில திருத்தங்களை செய்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்ட திருத்த மசோதா தயாரித்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே, தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி, மத்திய சமூக நீதித்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில், மூத்த குடிமக்களின் குறைகளை தீர்க்க, ஆணையம் அமைக்கப்படும்.
பராமரிப்பு தொகை:
தங்களது பிள்ளைகளிடமிருந்து, உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை கிடைக்கவில்லை என்றால், மூத்த குடிமக்கள், அந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். 
அவர்களது குறைகள், பிரச்னைகளுக்கு, 90 நாட்களில் ஆணையம் தீர்வு காணும். அதிலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது, ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். 
இப்போது, பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. 
இனி, வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காவிட்டால், மருமகன், மருமகளுக்கும் தண்டனை வழங்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
பெற்றோர் பராமரிப்புக்காக, அவர்களது வாரிசுகள், அதிகபட்சமாக, மாதம், 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, முந்தைய சட்டத்தில் நிர்ணயிக்கப் பட்டிருந்து. 
சட்ட திருத்தத்தில், அந்த அளவு நீக்கப்பட்டு, வசதியாக இருப்பவர்கள், தங்கள் பெற்றோருக்கு கூடுதல் பராமரிப்பு தொகை வழங்க வழிகாணப்பட்டுள்ளது. 
இதை மீறுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும். சில வழக்குகளில், இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என, மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
புகார்:
மூத்த குடிமக்களின் முழு அனுமதியில்லாமல், அவர்களின் பாதுகாப்பாளர்கள், அவர்களது சொத்துக்களை விற்க முடியாது. 
முதியோர் இல்லங்கள், முதியோருக்கு வீட்டுக்கு வந்து சேவை செய்யும் அமைப்புகள், கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், மூத்த குடிமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க, தனி அதிகாரி நியமிக்கப்படுவார். 
ஒவ்வொரு மாநிலத்திலும், மூத்த குடிமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க, தனி தொலைபேசி எண் வசதி ஏற்படுத்தப்படும்.

Comments

Popular posts from this blog

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சாஸ்த்ரா பல்கலைக் கழக ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.