Skip to main content

திருச்சி சிவாவுக்கு நாடாளுமன்றத்தின் உயரிய விருது



2019- ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா.

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை, தேர்வுசெய்து லோக்மாத் மீடியா குரூப் விருது வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருதுக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டவர் சி.பி.எம். கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆவார்.

இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கவுரவிக்கப்பட்ட நிலையில், தற்போது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மக்களவையிலும், மாநிலங்களவையிலும் *தாம் அங்கம் வகிக்கும் காலகட்டத்தில், ஜனநாயகத்தின் வலிமையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பவார் மற்றும் சுபாஷ் காஷ்யப் உள்ளிட்ட 11 பேரை உள்ளடக்கிய தேர்வுக்குழு, இந்த முடிவை எடுத்திருக்கிறது. *நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதினை, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பிக்கிறார். வருகிற டிசம்பர் 10-ந்தேதி டெல்லியில் உள்ள ஜன்பத் பகுதியில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் வைத்து மாலை 07.00 மணிக்கு இந்த விழா நடைபெறவுள்ளது.

தி.மு.க.வில் மிகச்சிறந்த பேச்சாளராகவும், மாநிலங்களவையில் மாநில உரிமைகள் குறித்து தொடர்ந்து குரலெழுப்புபவராகவும் இருந்துவரும் எம்.பி. திருச்சி சிவா, இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுவதை அறிந்து, தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சாஸ்த்ரா பல்கலைக் கழக ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.