பெருந்துறை சிப்காட்டில்
நிலம்,நீர்,காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூடக்கோரி
பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு
2018 ஜூன் 26-ல்
மாபெரும் ஆர்ப்பாட்டம்
பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.
பெருந்துறை சிப்காட் சுற்றுவட்டார கிராம மக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சூழல் ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நேற்று (1-6-2018) மாலை பெருந்துறை செந்தூர் மஹாலில் திரு.வி.எம்.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், தீர்வுக்கு மேற்கொள்ள வேண்டிய தொடர்நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிறைவாக, பின்வரும் தீர்மானங்கள் வருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 2700 ஏக்கர் பரப்பில் சிப்காட் (SIPCOT) அமைக்கப்பட்டு கடந்த சுமார்25 ஆண்டுகளாக செய்ல்பட்டு வருகிறது. இங்கு துணி,நூல் பதனிடுதல், சாயமிடுதல், தோல் பதனிடுதல், ரசாயனம், ஸ்டீல்,டயர்,ரப்பர் உள்ளிட்ட சுமார் 250 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
சாய, தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சுத்திகரிப்புச் செய்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு விரோதமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் இத்தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி நிலத்தில் விடுகின்றனர். அதோடு இத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியான லட்சக்கணக்கான டன் எடையுள்ள திடக்கழிவுகளை அகற்றாமல், ஆலைக்குள் நிலத்தில் புதைத்தும், அடுக்கியும் வைத்துள்ளனர்.
இதனால் சிப்காட் சுற்றுவட்டார கிராமங்களில் நிலமும்,நிலத்தடி நீரும் மாசுபட்டு பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும், இத்தொழிற்சாலைகளில் நிலக்கரி மற்றும் விறகுகளைக் கொண்டு கொதிகலன்களை எரிப்பதாலும், இரும்புத் தாதுக்கள், டயர்,டியூப் போன்றவற்றை எரிப்பதாலும் காற்று மாசுபட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இப்பகுதி மக்கள் கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.மொத்தத்தில் சிப்காட்டால் நிலம். நீர், காற்று மாசுபட்டு சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்க இயலாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மாசைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காக்க வேண்டிய அரசும், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் செயலற்றுக் கிடக்கின்றன.
ஆகவே, பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி, தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26-6-2018 செவ்வாய் காலை 10.00 மணிக்கு பெருந்துறை மாசுகட்டுப்பாட்டுவாரிய அலுவலகம் முன்பு (சிப்காட் ஆபிஸ் அருகில்) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் இணைந்த
"பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம்" என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை உருவாக்கப்பட்டது, இதன் ஒருங்கணைப்பாளராக எஸ்.சின்னசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கோரிக்கைகள்:
1) பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டுவரும் சாய, தோல் தொழிற்சாலைகளை பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு செய்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் வெளியேற்றுதல் செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் ஆலை நிர்வாகத்தினர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்; மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டிக்க வேண்டும். தொடர்ந்து விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகளை மூடவேண்டும். எதிர்காலத்தில் நிலம், நீர், காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை சிப்காட்டில் அனுமதிக்கக் கூடாது.
2) சிப்காட்டில் தேக்கியும், நிலத்தில் புதைத்தும் வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான டன் எடையுள்ள திடக்கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். ஓடைக்காட்டூர் குளத்தில் புதைந்துள்ள திடக்கழிவுகளை உடனே அகற்றி, குளத்தை தூர்வார வேண்டும்.
3) சிப்காட்டில் சாய,தோல் தொழிற்சாலைகள் பாய்லரை எரிக்க நிலக்கரி மற்றும் மரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். சிப்காட்டில்
டயர், டியூப், பேட்டரிகளை உருக்கும் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும்.
4) சிப்காட் சுற்றுவட்டார கிராமங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் தினசரி தேவையான அளவுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் வழங்க வேண்டும்.
5) சிப்காட் சுற்றுவட்டாரத்தில் கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சிப்காட் சுற்றுவட்டார மக்கள் அனைவருக்கும் கட்டணமின்றி முழு உடல் பரிசோதனை செய்து நோய்களைக் கண்டறிந்து உயர்தர சிகிச்சையளிக்க வேண்டும்.
6) சிப்காட் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிணறுகள் மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளின் தண்ணீரை மாதந்தோறும் ஆய்வு செய்து, ஆய்வு விபரங்க்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பி.சிவக்குமார். ஈஎஸ்எம் சண்முகம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் எஸ்.பொன்னுசாமி, ஓ.சி.சண்முகம், திருவாளர்கள் டி.என்.சென்னியப்பன், பல்லவி பரமசிவம், கி.வே.பொன்னையன், ஜி.பழனிசாமி, பி.ரகுநாதன், எஸ்.கருப்புசாமி, வி.டி.ஜெகதீஸ்வரன், சி.வேலுசாமி, டி.பி. சண்முகம், கே.ராஜசேகர், கே.ஆர்.சத்திய மூர்த்தி, ஜெயபிரகாஜ் நாராயணன், மு.முருகபூபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கூட்டத் துவக்கத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கும், சிப்காட் சுற்றுவட்டாரத்தில் கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களால் இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Comments
Post a Comment